ஞாயிறு, ஜனவரி 05, 2014

கோயாபல்ஸ்சான கோபால்சாமி.



வை.கோபால்சாமி எடுக்கும் அரசியல் முடிவுகள் மீது மாற்று கருத்துகள் இருந்தாலும் உலக விஷயங்கள் முதல் உள்ளுர் தகவல்கள் வரை வரலாற்று பினைப்போடு அற்புதமாக பேசுவார். இந்த ஒன்றுக்காக மட்டுமே எனக்கு அவரை பிடிக்கும்.

சுதந்தரா கட்சிக்காரரான வையாபுரி கோபால்சாமி திமுகவில் இணைந்து தன் அரசியல் பணியை தொடர்ந்ததோடு திமுகவின் எம்.பியாக டெல்லியில் இருந்தவர். ஈழ அரசியல் மீது ஈர்ப்பு கொண்டு வன்னி காடுகளுக்கு ரகசிய பயணம் போய் வந்தவர் பின் திமுவில் இருந்து வெளியேறி நாங்கள் தான் உண்மையான திமுக என கொடி பிடித்தவர் பின் மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். எளிதில் உணர்ச்சி வசப்படும் தலைவர். யாரையும் நம்பாதவர். இதனால் தான் கட்சி காலி டப்பாவாகி பெருங்காய வாசம் மட்டும் அடிக்கிறது.

தற்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளார். இது தவறல்ல. இங்கு எல்லா கட்சிகளும்மே அதிகாரத்துக்காக சந்தர்பவாத கூட்டணி அமைக்கின்றன. ஆனால் அதற்காக தன் கட்சி கொள்கையை பெரும்பாலும்  விட்டுக்கொடுப்பதில்லை.

வை.கோ தன் கட்சியின் அடிநாதமான கொள்கைகளை விட்டு தந்தது மட்டுமல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பொய்களை பேச தொடங்கியுள்ளார். 2014 புத்தாண்டு அன்று செய்தியாளர்களிடம், சேது சமுத்திர திட்டம் என்பது அண்ணாவின் கனவு திட்டம். இந்த திட்டம் அண்ணா இருந்தபோதே திமுகவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்த வேண்டும் என சொன்ன திட்டம். இந்த திட்டம் தென்மாவட்டங்களை வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்கும் என்பது உண்மை. இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது மதிமுகவின் கொள்கைகளில் ஒன்று. இந்த திட்டத்தின் எதிரி பா.ஜ.க. தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர சுற்றுசுழல் துறையை காரணம் காட்டி எதிர்ப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

மதிமுகவின் உயிர் கொள்கை, தனி ஈழம். அதிலும் காம்பர்மைஸ். காங்கிரஸ் போல் ஈழத்துக்கு பாஜக துரோகம் செய்யாது என்கிறார். 2004 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க தான். 2000, 2001ல் சிங்கள இராணுவத்துக்கு இந்திய இராணுவம் செய்த உதவிகளை வை.கோ திட்டமிட்டே மறைப்பது எந்த விதத்தில் நியாயம். 2011ல் இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவின் தலைவர் பி.ஜே.பி தலைவர்களில் மிக முக்கியமானவரான சுஷ்மா சுவராஜ். ஈழத்தமிழர்களை, போராளிகளை கொன்று குவித்த மகிந்தாவை பாராட்டி பேசினார். இன்று வரை ஈழத்துக்காக பாஜக தலைவர்கள் யாரும் குரல் தரவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஈழ நலனில் அக்கறை செலுத்துவோம் என்றுக்கூட சொல்லவில்லை. ஆனால் வை.கோ ஈழத்துக்கு பாஜக துரோகம் செய்யாது என்கிறார்.

ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழனத்துக்கே மிக பெரிய விரோதி சு.சாமி. அவர் இப்போது பி.ஜே.பியில் உள்ளார். அவர் இப்போதும் ஈழத்தை எதிர்த்தே வருகிறார். அவரைப்பற்றி கோபால்சாமியிடம் கேட்டால், அவருக்கு பதில் தமிழருவி மணியன் ஓடிவந்து பதில் சொல்கிறார், சு.சாமி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளோம் என்கிறார்.

பா.ஜ.க பக்கம் போக துடிக்கும் வை.கோவுக்கு துணையாக பேச்சுவார்த்தை நடத்துபவர் தமிழருவிமணியன். அவர், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அணி அமைக்கிறேன். மதிமுகவுக்கு 8 சதவித வாக்குகள், பாமகவுக்கு 6 சதவித வாக்குகள், தேமுதிகவுக்கு 10 சதவித வாக்குகள், மோடிக்கு 10 சதவித வாக்குகள் உள்ளது. இவர்கள் தான் ஜெயிப்பார்கள். 2016ல் வை.கோவை முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.

நீண்ட அரசியல் அனுபவமும்ள்ள மணியன் தான் கதை அளக்கிறார் என்றால் உலக அரசியல் பேசும் வை.கோவுக்கு நிஜ நிலவரம் தெரியுமல்லவா. சொந்த மாவட்டத்தில் ஒரு நகராட்சி தலைவர் பதவியைக்கூட கைப்பற்ற முடியாத தன் கட்சிக்கு முதல்வர் பதவி என்கிறார் மணியன் கோபால்சாமி இதை நம்பளாமா?. மணியன் சொல்வதை கேட்டுக்கொண்டு கோபால்சாமி உளறளாமா ?. 
கோயாபல்ஸ்.


ஹிட்லர் காலத்தில் அவரின் அமைச்சரவை சகாவாக இருந்தவர் ஜோசப் கோயாபல்ஸ். எழுத்தாளர். பொய்யை உண்மையை போல் பேசுவதில் கெட்டிக்காரர். ஹிட்லர் நினைத்தால் வானம் இருண்டு விடும்,  நாம் ஆகாயத்தில் வாழ்கிறோம் என கோயாபல்ஸ் பேசினால் மக்கள் நம்பிவிடுவார்கள் அந்தளவுக்கு பொய்கள் சொல்வதில் கெட்டிக்காரர். இரண்டாம் உலக போரின் போது பல நாடுகளை ஜெர்மனிக்கு ஆதரவாக திருப்பியதில் முக்கிய பங்கு இவருடையது. உலகம் முழுவதும் கோயாபல்ஸ் போல பொய் சொல்லாதே என்பதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

இனி வரும் காலம் வை.கோ போல பொய் சொல்லாதே என சொல்ல வைத்துவிடும் போல் இருக்கிறது.

வை.கோ அவர்களே, நீங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோடி அலையில் இழுத்து செல்லப்படுகிறிர்கள். உங்கள் கட்சிக்கு! தற்போது அதிகாரம் தேவைப்படுகிறது. அதனால் பாஜகவுடன் கூட்டணி சேர நினைக்கும் நீங்கள் பொய்களை கட்டவிழுத்து விடாதீர்கள். அது கோயாபல்ஸ்சை விட கேவலமாக்கி விடும். நாங்கள் பி.ஜே.பியுடன் இருக்கிறோம் என அறிவிப்பதோடு நிறுத்திவிடுங்கள்.

சில்வண்டுகளே........

மதிமுகவை சேர்ந்த சிலர் நுணுக்கமாக பேசுவதாக வை.கோவை மிஞ்சு பொய் சொல்வதில், கனவு காண்பதில்.

பி.ஜே.பி மதிமுக பாமக தேமுதிக அணி அமைத்தால். 40க்கு 30ல் வெற்றி என்கிறார்கள். இந்த அணிக்கும் அதிமுக அணிக்கும் தான் போட்டி என்கிறார்கள். வை.கோ புத்தரின் வாரிசு என்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் போல் வை.கோவை சித்தரிக்கிறார்கள் இன்னும் இன்னும் உள்ளது.............. அய்யா வை.கோவின் வீரன்களே உங்க அளப்பறை தாங்க முடியல. அரசியல கத்துக்கிட்டு வாங்க. இல்லன்னா பெருங்காய டப்பாவும் காணாம போயிடும்.  

1 கருத்து:

  1. ஒரு முனிசிபாலிட்டி வார்ட் தேர்தலில் தனியாக ஜெயிக்க வக்கில்லாத காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க தமிழ்நாட்டின் பெரும் கட்சிகளான திராவிட கட்சிகள் செயல்பட்டன அதைப்பற்றி தாங்கள் ஏன் என்று விளக்குவீரா.

    பதிலளிநீக்கு